செய்திகள்

இங்கிலாந்து- கார் விபத்தில் உயிரை பறித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டு சிறை

Published On 2019-06-16 09:00 GMT   |   Update On 2019-06-16 09:00 GMT
விபத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லண்டன்:

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அனுஷா ரங்கநாதன், இவர் இங்கிலாந்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம், அலுவல் பணிச்சுமை காரணமாக 2 நாட்கள் தூங்காமல் அனுஷா பணியாற்றினார். இதையடுத்து வீட்டுக்கு செல்ல முடிவெடுத்த அனுஷா தூக்க களைப்பில் கார் ஓட்டினார். அப்போது அவரது குழந்தையும் காரில் இருந்துள்ளது. 

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷயர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, அனுஷா கண்ணயர்ந்து உறங்கியதால், எதிரே வந்த மற்றோரு கார் மீது வேகமாக மோதினார்.  இதனையடுத்து இரண்டு கார்களும் சாலையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் கவிழ்ந்தன. 

இந்த விபத்தில் எதிரே வந்த காரை ஓட்டிய பேட்ரிஸியா ராபின்சன் என்ற 70 வயது மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 5 வாரம் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  



இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய அனுஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் விபத்தை ஏற்படுத்திய அனுஷாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அனுஷாவின் ஓட்டுநர் உரிமத்தையும் மூன்றரை ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டது. 
Tags:    

Similar News