செய்திகள்

எங்களது ரெயிலை எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கவில்லை- இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Published On 2019-06-15 09:59 GMT   |   Update On 2019-06-15 09:59 GMT
தங்கள் நாட்டு ரெயிலினை இந்திய எல்லைக்குள் செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
சீக்கியர்களின் மத குருக்களில் ஒருவரான அருந்தேவ் ஜீ-ன் நினைவு தினம் அனுசரிக்கும் ஜோர்மீலா என்ற நிகழ்வு பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் பலர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த 200 சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியிருந்தது. சீக்கிய யாத்திரிகர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து லாகூர் வருவதற்கு பாகிஸ்தான் அரசு சார்பில் சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்திருந்தது. 

ஆனால் தங்கள் நாட்டு ரெயிலினை இந்திய எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எதுவும் கூறவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் 200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி வழங்கியுள்ள போது ரெயில் இந்திய எல்லைக்குள் செல்ல அனுமதி மறுப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. இது குறித்து இந்திய அரசுடன் சம்பந்தப்பட்ட அமைச்சகம் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருந்தேவ் ஜீ-ன் நினைவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்வுக்கு இந்தியாவின் பஞ்சாபில் இருந்து சீக்கிய யாத்திரிகர்கள் லாகூர் வருவதற்காக பாகிஸ்தான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரெயிலினை இந்திய எல்லைக்குள் அனுமதிக்கவில்லை என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது என பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சீக்கிய அமைப்பின் தலைவர் டராசிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News