செய்திகள்

மாணவ-மாணவியருக்கு இலவச உணவு - அட்சயா பாத்ரா நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது

Published On 2019-06-14 13:25 GMT   |   Update On 2019-06-14 13:25 GMT
இந்தியாவில் தினந்தோறும் சுமார் 17.5 லட்சம் குழந்தைகளுக்கு சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வரும் அட்சயா பாத்ரா தொண்டு நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது வழங்கப்பட்டது.
லண்டன்:

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘அட்சய பாத்ரா’ என்னும் தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் என சுமார் 17.5  லட்சம் குழந்தைகளுக்கு  தினந்தோறும் சுகாதாரமான முறையில் சமைத்த சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வருகிறது. 

பசியினால் எந்த குழந்தையும் கல்வி என்னும் அரிய செல்வத்தை இழந்து விடக்கூடாது என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த தொண்டு நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது தினமும் சுமார் 1500 குழந்தைகளுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது. 

இதுபோன்று பல்வேறு மக்களின் பசியைப் போக்கும் தொண்டு நிறுவங்களுக்கு, லண்டனில் செயல்பட்டு வரும் பிபிசி தொலைக்காட்சியின் துணை நிறுவனம் உணவு மற்றும் பண்ணை தொழிலுக்கான உலகளாவிய  விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. 

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இந்த சர்வதேச சாம்பியன் விருது பிரிட்டன் நாட்டில் உள்ள பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற விழாவில்  ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

 இந்த விருதைப் பெற்ற ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வெங்கட் கூறுகையில், “இந்த விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக எங்கள் நிறுவனத்தால் பயன்பெறும் 17.5 லட்சம் பள்ளிக்குழந்தைகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
Tags:    

Similar News