செய்திகள்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது

Published On 2019-06-14 09:13 GMT   |   Update On 2019-06-14 09:13 GMT
இலங்கையில் 258 உயிர்களை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட 5 பேர் ஐக்கிய துபாயில் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் சுமார் 100 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

இதுதவிர, வெளிநாடுகளில் இருந்தவாறு இந்த தாக்குதல்களுக்கு துணையாக இருந்ததாக சிலரை இலங்கை போலீசார் தேடி வருகின்றனர்.



குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தடை செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த முஹம்மது மில்ஹான் உள்பட சிலர் தேடப்படும் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முஹம்மது மில்ஹான் உள்பட தேடப்படும் 5 பேரை இலங்கை போலீசார் துபாயில் கைது செய்து, இன்று காலை கொழும்புவுக்கு அழைத்து வந்ததாக இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News