செய்திகள்

நட்பு மரம் பட்டுப்போனது - அமெரிக்காவுக்கு மற்றொரு மரக்கன்றை அனுப்புவேன் - பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேட்டி

Published On 2019-06-14 01:00 GMT   |   Update On 2019-06-14 01:00 GMT
முதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறை பகுதியில் இருந்து மற்றொரு ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
பாரீஸ்:

பிரான்ஸ் அதிபர் மெக்ரான், கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது, இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக, ஓக் மரக்கன்றை டிரம்புக்கு பரிசாக வழங்கினார்.

பின்னர் டிரம்ப், மெக்ரான் இருவரும் இணைந்து, அந்த மரக்கன்றை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வளாகத்தில் நட்டனர். இந்த நட்பு மரம் பட்டுப்போய் விட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இது மெக்ரானின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, மற்றொரு ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க இருப்பதாக மெக்ரான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “வெள்ளை மாளிகையில் நட்ட ஓக் மரக்கன்று பட்டுப்போனது சோக நிகழ்வு அல்ல. அந்த மரம் தனிமைப்படுத்தப்பட்டதால் அது பட்டுப்போயிருக்காலம்” என்றார்.

மேலும் அவர் “முதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறை பகுதியில் இருந்து மற்றொரு ஓக் மரக்கன்றை எடுத்து, அமெரிக்காவுக்கு நான் அனுப்புவேன். ஏனென்றால் நமக்கும், அமெரிக்க மக்களுக்கும் இடையிலான நட்புறவு சிறப்பாக இருப்பதாக நான் நினைக்கிறேன்” என கூறினார். 
Tags:    

Similar News