செய்திகள்

ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்

Published On 2019-06-12 11:16 GMT   |   Update On 2019-06-12 11:16 GMT
ஜெர்மனியில் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பெர்லின்:

ஜெர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 13 அரசுத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், 2025ம் ஆண்டிற்குள் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இப்போராட்டம் பற்றி 17 வயதுடைய ஒரு ஆர்வலர் கூறுகையில், இப்போது உள்ள பருவநிலை திட்டமானது நமது எதிர்காலத்தை பாழாக்கிவிடும், என்றார். “இன்றைய நாளின் முக்கிய நோக்கமானது பருவநிலை அழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பருவநிலை அழிவைப்பற்றி பேசவேண்டும் மற்றும் பருவநிலை அவசர திட்டம் நிறைவேற்றப்பட்டது என அறிவிக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

50க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமைகள்’ போராட்டத்தின் முழக்கங்களான, “நமக்கு என்ன வேண்டும்? பருவநிலைக்கான நீதி! எப்போது வேண்டும்? இப்போதே வேண்டும்”, என்று முழங்கினர்.

எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் என்பது பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் சர்வதேச இயக்கமாகும். மனித இனம் அழிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்த்து இந்த இயக்கம் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News