செய்திகள்

இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு

Published On 2019-06-12 10:19 GMT   |   Update On 2019-06-12 14:05 GMT
நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது.
லண்டன்:

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பாக அவர்மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். 20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.



அவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது.  அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது.  அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மூன்றாவது முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தின் ராயல் கோர்ட்டில் ஜாமீன் கோரிய நிரவ் மோடியின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை இங்கிலாந்து கோர்ட் நிராகரித்துள்ளது. 
Tags:    

Similar News