search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.
    • திமிங்கலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

    ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில்

    160 பைலட் திமிங்கலங்கள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளன. ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.

    மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு கடலில்க்ஷ விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் போலந்து அமைந்துள்ளது.
    • மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய மையமாக திகழ்கிறது.

    இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது உக்ரைன் மீது ரஷியா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வது உண்டு. இதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷியாவுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாம் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார். அப்போது ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும். இருந்தபோதிலும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

    ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல்கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளது. ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானது என்றார்.

    நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து ரஷியா, பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளது.

    • பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது.
    • எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும்.

    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்தது. சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர்.

    குறிப்பாக போர் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர வானிலை நிகழ்வுகள் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023-ம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர். 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா மற்றும் யோமன் ஆகிய நாடுகளில் நீடித்த பெரும் உணவு நெருக்கடிகள் தொடர்கின்றன.

    ஹைட்டி நாட்டில் மோசமான அரசியல் ஸ்திரமின்மை மற்றும் விவசாய உற்பத்தி குறைந்ததால் பட்டினி ஏற்பட்டுள்ளது. எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். 13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாக உள்ளன.

    வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.
    • மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது.

    மணிலா:

    தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.

    நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் வெப்ப தாக்கம் காரணமாக பிலிப்பைன்சில் இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது.
    • பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது. கடந்த 16-ந்தேதி நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் 7 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

    • தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.
    • வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் 2 குதிரைகளின் உடலில் இருந்தும் ரத்தம் வழிகிறது.

    லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக அந்த 2 குதிரைகளும் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர். போலீஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.


    • டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.
    • சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர்.

    ஏதென்ஸ்:

    ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக ஏதென்ஸ் விளங்குகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவு சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன. பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறமாக மாறி காட்சியளித்தது.

    இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர். டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

    அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தகாலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வாடிக்கைதான். இந்தநிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சாகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்ததால் கிரீசை ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியதுபோல புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

    • நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
    • நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    "நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.

    • பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட ஹூவாங், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார்.
    • வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார்.

    பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட அவர், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார். 'புளூ பயர்' என்று அழைக்கப்படும் ஒரு எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக அவர் ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றார். அங்கிருந்து எரிமலை பின்னணியில் தன்னை மறந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். 75 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர். இதுபற்றிய செய்திகள் ஊடகங்களையும், வலைத்தளங்களையும் ஆக்கிரமித்தது. பலரும் விமர்சன கருத்துகளை பதிவு செய்தனர்.

    • கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு.
    • விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று அறிவிப்பு.

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

    சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் போயிங்

    ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் முதல் பைலட்களில் ஒருவராக அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும், இந்த மிஷனை வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

    விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
    • இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    வாஷிங்டன்:

    ஈரான் அதிபர் இப்ரா ஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெ ரீப்பை சந்தித்து பேசினார்.

    இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் பொருளாதாரத் தடைகள் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார்.

    மேலும் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு விநியோகம் செய்த சீன மற்றும் பெலாரசை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறித்து அவர் கூறும்போது, பேரழிவு ஆயுதங்களை அதிகமாக்கி மற்றும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகள் என்பதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிறுவனங்கள் சீனா மற்றும் பெலாரசை அடிப்படையாகக் கொண்டவை. பெலாரசில் உள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதை நாங்கள் கண்டோம்.

    பேரழிவு ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பாக, அவை எங்கு நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது.
    • சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்.

    இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்தான்.

    அதை வாங்கிய அவனது தாய் இது பழைய வளையல் என்று குப்பையில் வீச நினைத்தார். ஆனாலும் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதனால் அந்த வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த வரலாற்று பொருள் சிறுவன் கையில் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் அவ்வாறு செய்யும் போது நான் அவனை திட்டினாலும் தற்போது அவனது கையில் வரலாற்று பழமைவாய்ந்த தங்க வளையல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    ×