தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், இன்று அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சிறு வயதில் மருத்துவராக வேண்டும் என்று விரும்பிய தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவருக்கு, ஆசை நிறைவேறாமல் இருந்தது. இருந்தாலும் தனது முயற்சியை கைவிடவில்லை. மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, அதில் பெறப்படும் மதிப்பெண்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
முன்னாள் ஆசிரியரான சிவப்பிரகாசத்திற்கு 61 வயதாகிறது. பியுசி படித்துள்ளார். ஓய்வு பெற்றவரான சிவப்பிரகாசம், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். அவர் அரசு பள்ளியில் படித்ததாக கூறி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்தார். ஒட்டுமொத்த நீட் மதிப்பெண் தரவரிசையில் அவர் சுமார் 240-வது இடத்தை பிடித்தார்.
7.5 இடஒதுக்கீட்டின்படி அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு சுமார் 400-க்கு மேற்பட்ட மருத்துவ இடங்களில் இடம் கிடைக்கும். இதனால் இன்று சிவப்பிரகாசம் கலந்தாய்வுக்கு வந்தார். இவர் அதிகாரியாக இருப்பாரோ? என கலந்தாய்வுக்கு வந்த மாணவர்கள் நினைக்க, சிவப்பிரகாசமோ கலந்தாய்வுக்கான வரிசையில் நின்றதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதனால் அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 12-ம் வகுப்பு படித்தவர்களும், 60 வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என சட்டம் உள்ளதாக என அதிகாரிகள் தெரிவிக்க, சிவப்பிரகாசம் கலந்தாய்வில் இருந்து விலகி, ஏமாற்றத்துடன் திரும்பினார்.