காஞ்சீபுரம், கடலூர் உள்பட 13 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம் - தமிழ்நாடு அரசு ஒப்புதல்
பதிவு: ஜனவரி 27, 2022 02:35 IST
தமிழ்நாடு அரசு
சென்னை:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தனியார், பொதுத்துறை பங்களிப்புடன் திருமங்கலம் நகராட்சியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் 2019-ம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டது. அதுபோல காஞ்சீபுரம், திருத்தணி, மயிலாடுதுறை, தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் ஆகிய 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் 2020-ம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதம் எழுதினார். அதில், சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையிலும், நகராட்சி நிர்வாக அமைச்சரின் அறிவிப்பிலும் சில நகரங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டம் இடம் பெற்றிருந்தது. அதன்படி, ஒவ்வொரு பேருந்து நிலையத்துக்கும் விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கு போதுமான நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அதற்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கான கருத்துரு பெறப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயார் செய்தன. இதுதொடர்பான குழுவின் கூட்டத்தில் அவை வைக்கப்பட்டன. கொள்கை அளவில் 50 சதவீதம் தொகையை அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நகராட்சிகளால் தொகையை பங்களிப்பு செய்ய முடியவில்லை என்பதால் மீதத் தொகையை டுவிட்கோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. அதன்படி, ஈரோடு, கரூர், கடலூர், காஞ்சீபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.424.56 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக விரிவான திட்ட அறிக்கையை அந்த உள்ளாட்சி அமைப்புகள் தாக்கல் செய்துள்ளன.
எனவே புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை நிதியுதவியுடன் வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவரது கோரிக்கையை அரசு கவனத்துடன் பரிசீலித்து ஏற்று, அதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.