தமிழகம் முழுவதும் 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் நடக்கின்றன.
சென்னை:
முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த வாரம் தொடங்கியது.
முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரம் முடிந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள்.
அந்த வகையில் பூஸ்டர் தடுப்பூசி கடந்த வாரம் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இந்த மாத கணக்கெடுப் பின்படி 10 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
அதன்படி நாளை (27-ந் தேதி) தமிழகம் முழுவதும் 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் நடக்கின்றன.
சென்னையில் 160 நகர்ப்புற சுகாதார மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப் படுகிறது. இதுதவிர மாநகராட்சியின் டிவிஷன் அலுவலகங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... குடியரசு தின விழா- டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் அணிவகுப்பு