ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஆகியவற்றை ஏற்றார்.
73-வது குடியரசு தினம்: தேசிய கொடி ஏற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
பதிவு: ஜனவரி 26, 2022 08:22 IST
மாற்றம்: ஜனவரி 26, 2022 13:30 IST
கொடி ஏற்றும் நிகழ்ச்சி
சென்னை:
இந்தியாவின் 73-வது குடியரசு தினம் இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமரா ஜர் சாலையில் இன்று காலை 8 மணிக்கு குடியரசு தின விழா நடைபெற்றது.
முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக குடியரசு தின விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விழாவில் பங்கேற்பதற்காக அவர் காலை 7.55 மணிக்கு வந்தார். அவரை மோட்டார்சைக்கிள் அணி வகுப்பு மரியாதையுடன் அழைத்து வந்தனர்.
காலை 7.56 மணிக்கு விழா நடைபெற்ற இடமான காமராஜர் சாலை காந்தி சிலை அருகே அவர் வந்து இறங்கினார். அவரை தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
7.57 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கவச வாகனங்கள் புடைசூழ கடற்கரை சாலையில் வந்தார். 7.58 மணிக்கு அவரை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதையடுத்து முப்படையின் மூத்த அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு வருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி கம்பீரமாக சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்தார்.
7.59 மணிக்கு அவர் கொடி ஏற்றும் பகுதிக்கு சென்றார். சரியாக 8 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதே சமயத்தில் வானில் பறந்து வந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக் கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.
இதையடுத்து கவர்னர் ஆர்.என். ரவி அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அங்கிருந்தபடி அவர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு வணக்கம் தெரிவித்து அதை ஏற்றுக் கொண்டார்.
முதலில் ராணுவத்தினர் மிடுக்காக அணிவகுத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து கடற்படை, ராணுவ இசைக்குழு, விமானப்படை, கடலோர காவல்படையினர் அணிவகுத்தனர்.
அவர்களை தொடர்ந்து கடற்படை ஊர்தி, விமானப்படை ஊர்தி, கடலோர காவல்படை ஊர்தி அணிவகுத்து வந்தன. திருலோகநாதன் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
இவர்களை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மத்திய துணைநிலை ராணுவத்தினர், சி.ஆர்.பி.எப். இசைக்குழு, ரெயில்வே பாதுகாப்பு படை யினர் வந்தனர். கோவிந்த ராஜு தலைமையில் தமிழக காவல் துறையினர் அணி வகுத்தனர்.
விமலாராணி தலைமையில் தமிழக பெண்கள் காவல் சிறப்பு படையினர் அணிவகுத்து வந்தனர். தமிழக ஆயுதப்படை இசைக் குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, தமிழ்நாடு ஆண் கள் பிரிவு காவல்படை, தமிழ்நாடு கமாண்டே படை வீரர்கள் அடுத்தடுத்து அணி வகுத்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை போலீஸ் கூட்டு இசைக்குழுவினர், நீலகிரி காவல்படை, தமிழக வனத்துறை, சிறைத்துறை இசைக்குழு அணிவகுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து சிறைத்துறை, தமிழக தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, ஊர்க்காவல் படை பெண்கள் பிரிவு ஆகியோரும் அணி வகுத்து வந்தனர். 10 நிமிடங்களில் இந்த அணிவகுப்பு மரியாதை நடைபெற்று நிறைவு பெற்றது.
அணிவகுப்பு மரியாதை நிறைவு பெற்றதும் கவர்னர் ஆர்.என்.ரவி மேடைக்கு சென்று அமர்ந்தார். அதே சமயத்தில் மேடையில் அமர்ந்திருந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து வந்தார். தொடர்ந்து வீர-தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீர-தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு படை வீரர் ராஜீவ்காந்தி, திருவொற்றியூர் தி.மு.க. பிரமுகர் தனியரசு உள்பட 8 பேருக்கு வீர-தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் விருது கோவையைச் சேர்ந்த முகமதுரபிக்கு வழங்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்துறை சிறப்பு பதக்கம் செ.ராமசாமிக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கம் 5 பேருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் தெற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது.
இதையும் படியுங்கள்... ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
திருவண்ணாமலை, மதுரை இ-3 காவல் நிலையங்கள் 2-வது, 3-வது பரிசுகளை பெற்றன. விருது மற்றும் பரிசு பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
8.15 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்து முடிந்தன.
இதையடுத்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில் நாதசுவர மங்கல இசை முழங்க அலங்கார ஊர்தி வந்தது. அதில் 4 பெண்கள் பாரம்பரிய நடனத்தை வெளிப்படுத்தியபடி வந்தனர்.
அந்த ஊர்தியை தொடர்ந்து மேலும் 3 அலங் கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. விடுதலைப்போரில் தமிழகம் என்ற பெயரில் முதல் அலங்கார ஊர்தி யும், தலைவர்களின் சிலைகளுடன் அடுத்தடுத்து அலங்கார ஊர்திகளும் வந்தன.
சுமார் 3 நிமிடங்களில் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு நிறைவு பெற்றது.
8.20 மணிக்கு விழா நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. மாநில காவல்துறை கூட்டு இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அத்துடன் விழா முடிந்தது.
சுமார் 30 நிமிடங்களுக்குள் குடியரசு தின விழா நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. விழா முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி வணக்கம் தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றார்.
கொரோனா பரவல் காரணமாக கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பொதுமக்கள், பார்வையாளர்கள் கடற்கரைக்கு இன்று வரவில்லை.
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொலைக் காட்சி மூலம் மட்டுமே பொது மக்கள் கண்டுகளித்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதனால் குடியரசு தினவிழா மிக எளிமையாக குறுகிய நேரத்தில் நடைபெற்று முடிந்தது.
இதையும் படியுங்கள்... குடியரசு தின விழா- சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவிரவித்த முதலமைச்சர்
Related Tags :