இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மனு
பதிவு: ஜனவரி 23, 2022 08:57 IST
மாற்றம்: ஜனவரி 23, 2022 09:17 IST
தேர்தல் ஆணையம்- உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் அஷ்வினி குமாா் உபாத்யாய என்பவர் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தோ்தல் வரும்போது வாக்காளா்களை கவரும் எண்ணத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, அரசியல் சாசன நடைமுறைகளையும் கடுமையாக பாதிக்கிறது.
இந்த நடைமுறை அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிா்க்கப்பட வேண்டும்.
இதற்காக, தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடை செய்யும் கட்டுப்பாடுகளை, மாநில கட்சியாக அங்கீகாரம் அளிப்பதற்கான தோ்தல் சின்ன ஒதுக்கீடு உத்தரவு 1968-ல் தோ்தல் ஆணையம் சோ்க்க உத்தரவிட வேண்டும்.
தோ்தலுக்கு முன் பொது நிதியில் இருந்து இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது வாக்காளா்களின் சமநிலையை பாதிக்கிறது. தோ்தல் நடைமுறையின் தூய்மையை கெடுக்கிறது. அரசியலமைப்புச் சட்ட பிரிவு 14, 162, 266(3) ஆகியவற்றை இந்த நடைமுறை மீறுகிறது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தலில் ஒரு கட்சி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என அறிவிக்கிறது, மற்றொரு கட்சி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை அறிவிக்கிறது.
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக ஏகப்பட்ட இலவச வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. பஞ்சாப் அரசால் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்க முடியவில்லை. ஏற்கனவே அம்மாநிலத்திற்கு ரூ.77,000 கோடி கடன் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடன் மேலும் அதிகரிக்கிறது. இதில் இலவசங்களை எப்படி தர முடியும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Related Tags :