புது டெல்லி:
சீனா இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது.
இந்நிலையில் அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தைச் சேர்ந்த மிரம் தரோன், ஜானி யாயிங் என்ற இளைஞர்கள் அருகில் உள்ள துதிங் பகுதிக்கு நேற்று முன்தினம் வேட்டையாடச் சென்றனர். சீன எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் வைத்து இருவரையும் சீன ராணுவம் சிறைப்பிடித்தது.
இதில் ஜானி யாயிங் தப்பிவந்த நிலையில், மிரன் தரோன் என்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனம் அவரது அக்கறையின்மையை காட்டுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன், ஒரு இளைஞனை சீனா கடத்திச் சென்றுவிட்டது. இதுபோன்ற இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். நாங்கள் கடத்தப்பட்ட மிரன் தரோனின் குடும்பத்திற்கு துணை நிற்போம். நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நாம் தோல்வி அடைந்துவிடவில்லை. இந்த விஷயத்தில் பிரதமரின் மவுனம் அவரது அக்கறையின்மையை காட்டுகிறது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.