சென்னையில் நேற்று பெய்த மிக கனத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக 32 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை மிக கன மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.
வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வெள்ளத்தை வடிய வைத்து மின்சாரம் வழங்கும் பணியில் மின் வாரிய ஊழியர்களும், மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நேற்று பெய்த மிக கனத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக 32 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதில் 23 இடங்களில் சீரான நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 4,200 மின் இணைப்புகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மழை நீர் அகற்றும் பணியை விரைவுப்படுத்தி வருகிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டதும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்