கேரள அரசின் பொய்யான வதந்தி மற்றும் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் கடந்த 1 மாதமாக 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டிலும் 2015, 2018ம் ஆண்டுகளிலும் அணை நீர்மட்டம் 142 அடி வரை தேக்கப்பட்டது.
இந்த 3 ஆண்டுகளிலும் 1 நாள் மட்டுமே அணையின் நீர்மட்டம் 142 அடி வரை நிலைநிறுத்தப்பட்டு பின்னர் அது படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இருந்தபோதும் அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்க விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.
அணைப்பகுதிக்கு தன்னிச்சையாக கேரள மந்திரிகளை அனுப்பி உபரி நீரை வெளியேற்றியது. இருந்தபோதும் மழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர் மட்டம் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி 136 அடியாக உயர்ந்தது.
நவம்பர் 30-ந் தேதி உச்சநீதிமன்ற அறிவுரையின்படி 142 அடி வரை தேக்கப்பட்டது. அன்று முதல் கடந்த 1 மாதமாக தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் உள்ளது. குறிப்பாக 12 நாட்கள் 142 அடி வரை நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது.
மற்ற 18 நாட்கள் 141.50 அடிக்கு குறையாமல் நிலைநிறுத்தப்பட்டது. 1 மாதத்துக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தேக்கி சாதனை படைத்திருப்பதன் மூலம் கேரள அரசின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது என்று மீண்டும் நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை குறித்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பிலும், தன்னார்வலர்கள் என்ற பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதும் நீதிபதிகள் அவர்களுக்கு கடுமையான விமர்சனங்களை வைத்த நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடிக்கு மேல் நீடித்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141.15 அடியாக உள்ளது. நீர்வரத்து 244 கன அடி. திறப்பு 600 கன அடி. இருப்பு 7437 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 68.83 அடி. வரத்து 518 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 5529 மி.கன அடி.
தேக்கடி 1.2, கூடலூர் 3.8, சண்முகாநதி அணை 4.8, வீரபாண்டி 8, உத்தமபாளையம் 3.6, வைகை அணை 2.8, கொடைக்கானல் 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.