ராகுல் காந்தி ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார். இவரது பயணத்தை பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் ராகுல் காந்தி திடீரென நேற்று விமானம் மூலம் இத்தாலி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சில நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர் நாளை அங்கு நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிகிறது. கடந்த மாதம் தீபாவளிக்கு முன்பாக ராகுல்காந்தி லண்டன் சென்றிருந்தார். சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அதன் பின்னர் இந்தியா திரும்பினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் அவர் கலந்துகொண்டு 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றார்.
ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார். ஏற்கனவே இவரது பயணத்தை பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேலால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி இத்தாலி சென்று உள்ளார். அவரது இந்த பயணம் பற்றி தேவையில்லாமல் பா.ஜனதா போன்ற கட்சிகள் வதந்தியை பரப்ப வேண்டாம்” என தெரிவித்து உள்ளார்.
ராகுல் இத்தாலி சென்றுள்ளதால் பஞ்சாப்பில் நடைபெறும் பேரணி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள மோகா மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தேர்தலையொட்டி காங்கிரஸ் பிரமாண்ட பேரணி நடைபெறுவதாக இருந்தது. இந்த பேரணியை ராகுல் காந்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தில் 5-ந் தேதி பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.