பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்கள் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கேன் குடிநீர் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் அதன் விலை தற்போது உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் டீலர்களுக்கு வழங்கப்படும் கேன் குடிநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 1,700 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவற்றின் மூலம் தினமும் 2 கோடி லிட்டர் கேன் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்கள் விலை உயர்ந்தது. இதன்காரணமாக பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விலை டீலர்களுக்கு உயர்த்தி விற்கப்படுகிறது.
ஆனால் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு ஏற்றப்படவில்லை என்று தமிழ் நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல செயலாளர் எஸ்.சுந்தர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்கள் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 300 மில்லி குடிநீர் பெட்டி (35 பாட்டில்கள்) ரூ.5 உயர்ந்து ரூ.110-க்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் 500 மில்லி, 1 லிட்டர் பாட்டில் கொண்ட பெட்டி ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. டீலர்களுக்கு விலை உயர்த்தப்பட்ட போதிலும் அதன் அதிகபட்ச விலையில் மாற்றம் இல்லை. பொது மக்களுக்கு வழக்கமான அதே விலையில் குடிநீர் பாட்டில்கள் விற்கப்படும். 20 லிட்டர் குடிநீர்கேன் ரூ.6 முதல் ரூ.8 வரையில் விற்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 350 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். பெரும்பாலான தேவை சென்னையை சார்ந்தே அமைந்துள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன் பொது மக்களுக்கு ரூ.30 முதல் அதிக பட்சமாக ரூ.40 வரை விற்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மூலப் பொருட்களின் விலை உயர்ந்தபோதிலும் பொது மக்களுக்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில், கேன் விலை உயர்த்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட தெரு- அமைச்சர் தகவல்