தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், ரமிஸ் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக உள்ளனர். இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் 29-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு பார்சல் மூலம் கடந்த ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. மத்திய மறைமுக வரி வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை மூலம் தெரிய வந்தது.
இந்த வழக்கில் 34 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ரபின்ஸ் அமீது, பைசல் பரித் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் சுங்க இலாகா மற்றும் வரி வருவாய் புலனாய்வுத்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் கூட்டாக விசாரணை நடத்தி வந்தன.
விசாரணை அதிகாரிகளிடம் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிவசங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சுங்க இலகா அதிகாரிகள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் சரித் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், ரமிஸ் ஆகியோர் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளனர். இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் 29-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டில் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஐக்கிய அரபு தூதரகம் வழியாக தொடர்ச்சியாக இவர்கள் தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் நடத்திய சோதனையில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது உறுதியாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.