நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
ராசிபுரம்:
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் அவர் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் அவர் திறந்த வேனில் சென்றபடி வாக்குகள் சேகரித்தார்.
இன்று ராசிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி எம்.பி.நாமகிரிபேட்டை வெங்கலமேட்டில் மக்கள் மத்தியில் பேசினார். பின்பு முத்தாயம்மாள் பாலிடெக்னிக்கில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக ராசிபுரத்தை அடுத்த பிள்ளாநல்லூர் பேரூர் சந்தையில் வியாபாரிகளிடம் அவர் உரையாடினார்.
ராசிபுரம் பகுதியில் நெசவாளர்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
எங்களோடு மிக முக்கியமான பிரச்சினைகளை நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள். வங்கிகளில் நீங்கள் கடன் வாங்க கூடிய நேரத்தில் வங்கிகள் உங்கள் தேவைகளை புரிந்துகொண்டு கடன் வழங்காத சூழ்நிலையிலே தனியாரிடம் கடன் வாங்க கூடிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். உங்கள் சுயமரியாதையை கேள்விக்குறியாக்கக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளுகிறது என்பதை இங்கு தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள்.
பலர் நெசவாளருடைய கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை. நீங்கள் வாக்களித்து உங்களுடைய ஆதரவோடு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கூட்டுறவு கடன்களை நிச்சயமாக மு.க.ஸ்டாலின் சரி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்.
தி.மு.க. ஒரு வாக்குறுதியை கொடுத்தால் நிச்சயமாக நிறைவேற்றி தரும். பத்திர பதிவு அலுவலகம் வெண்ணந்தூர் பகுதியில் உருவாக்கி தரப்படும். நலவாரியம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக நெசவாளர்களுக்கான ஒரு நல வாரியம் உருவாக்கி தரப்படும்.
தி.மு.க. ஆட்சியில் பருத்தி விலை ஏறாத சூழ்நிலையில் தற்போது நூல் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது. நூல் விலை ஏறாமல் மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயிக்கப்படக் கூடிய அளவிலான முயற்சிகள் நம்முடைய ஆட்சியில் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், நூல் விலை உயராமல் இருப்பதற்கான வழிமுறைகள் காணப்படும் என்ற உறுதியை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.
இன்னும் 3 மாதத்தில் நம்முடைய ஆட்சிதான். அதன் பிறகு ஜி.எஸ்.டி.கவுன்சில் வழியாக கைத்தறி, விசைத்தறி வித்தியாசத்தை எடுத்துச்சொல்லி புரிய வைத்து ஜி.எஸ்.டி.யில் இருக்கும் குழப்பங்களை முடிவு செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.
அ.தி.மு.க. மத்திய அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் திட்டம் இரண்டுமே கேள்விக்குறியாகி இருக்கிறது. இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்ற நிலை வந்தால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கலைஞர் கொண்டு வந்த இந்த இரண்டு திட்டங்களையும் நாங்கள் தொடருவோம் என்ற உறுதியை அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.