தமிழகத்தின் தன்மானத்தை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்து ஆட்சியை நிறைவு செய்வது சாதனையா? என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.
உடுமலை:
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இன்று அவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். உடுமலை பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அனைத்து சாதியினரும் ஒற்றுமையுடன் ஒரே இடத்தில் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்பதற்காக சமத்துவபுரத்தை உருவாக்கினார். ஆனால் பா.ஜனதா அரசு மக்களை பிரித்து ஒற்றுமையை குலைத்து பிரித்தாளும் சூழ்நிலையை கையாண்டு வெறுப்பு உணர்வை தூண்டி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும்போது 100 நாட்களுக்கு கூட அ.தி.மு.க.அரசு நீடிக்காது என்று ஸ்டாலின் கூறினார். தற்போது நாங்கள் ஆட்சியை நிறைவு செய்யும் நிலையை எட்டிவிட்டோம். அவரால் என்ன செய்ய முடிந்தது என்று கேட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் தன்மானத்தை பா.ஜனதாவிடம் அடமானம் வைத்து அதன் கட்டுப்பாட்டில் இயங்குவது ஒரு ஆட்சியா? இது ஒரு சாதனையா? என்று நான் கேட்கிறேன்.
தற்போது ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குளறுபடி உள்ளது. அதிகாரம் படைத்தோருக்கு எளிதில் பொருட்கள் கிடைத்து விடுகிறது. ஏழை, எளியோருக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. இது தான் அ.தி.மு.க.வின் சாதனையா? என்று பேசினார்.
தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து செய்யப்படும், நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.