பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்கள்.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ஷிவ்குமார் கக்கா கூறியதாவது:-
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எப்போதுமே நாங்கள் மறுத்தது இல்லை. அரசு எப்போது எல்லாம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களுடன் நாங்கள் பேசி இருக்கிறோம்.
பிரதமர் இப்போது அழைப்பு விடுத்திருக்கிறார். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதே நேரத்தில் நேற்று பிரதமர் பேசும்போது விவசாயிகளை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை கூறி இருக்கிறார்.
போராடுவதையே எப்போதும் தொழிலாக கொண்டு இருக்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தும் வகையில் அவர் எங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதால் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. பாரதிய ஜனதாவோ அல்லது கட்சியின் முன்னாள் தலைவர்களோ ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியது இல்லை.
அவர்கள் எப்போதுமே பொதுமக்களின் இயக்கங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் போராட்டம் என்பது முக்கியமானது. அரசு தவறான கொள்கை முடிவுகள் எடுத்தால் அதை எதிர்த்து போராட எங்களுக்கு உரிமை இருக்கிறது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். இதையே பலமுறை கூறி விட்டார்கள். அப்படியே தொடரும் என்று கூறினால் ஏன் அதற்கு சட்டம் இயற்றி உத்தரவாதம் அளிக்கக்கூடாது?
3 சட்டங்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. அதை விட்டுவிட்டு மற்றவை பற்றி கூறுவதால் எந்த பயனும் இல்லை. எங்கள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் யாரும் பங்கேற்கவில்லை. அவர்களுடைய தூண்டுதலுக்கும் இடம் அளிக்கவில்லை.
அதே போல அரசியல் சதி எதுவும் இதில் இல்லை. அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் எங்களை சந்தித்து தார்மீக ஆதரவு அளிக்கிறார்களே தவிர வேறு செயல்கள் எதையும் செய்யவில்லை. நாங்களாக எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு தலைவர் ராகேஷ்திகாயத் கூறும் போது, “பிரதமர் பாராளுமன்றத்தில் நேற்று என்ன கூறினாரோ அதே உத்தரவாதத்தை ஏற்கனவே மத்திய அரசு தரப்பில் இருந்து எங்களிடம் சொல்லி விட்டார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுடைய வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் சட்டங்கள் உள்ளதால் அதை எதிர்க்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டத்தில் அம்சங்கள் உள்ளன.
நாங்கள் பட்டினி கிடந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க விட்டு கொடுக்க முடியாது. இதற்காகதான் போராட்டத்தை நடத்துகிறோம்” என்று கூறினார்.