கமல்ஹாசன் 10 நாட்கள் ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் படிக்கட்டில் தவறி விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காலில் அவர் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.
அறுவை சிகிச்சை செய்து இருந்த வலது காலில் கடந்த சில நாட்களாகவே வலி இருந்துள்ளது. அந்த வலியுடன் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்ட கமல்ஹாசன் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் வலது காலில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதன்படி கமல்ஹாசனின் காலில் நேற்று முன்தினம் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆபரேசனுக்கு பிறகு கமல்ஹாசன் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
ஆஸ்பத்திரியில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் வீட்டில் ஒரு வாரமோ, 10 நாட்களோ அவர் ஓய்வெடுப்பார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.
இந்த ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்தவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
ஆபரேசனுக்கு முன்பு ஓய்வு தொடர்பாக கமல் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன்” என்று தெரிவித்து இருந்தார்.
இதன்படி கமல் பிரசார வீடியோக்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.