4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது முக்கிய பங்கு வகித்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மீண்டு வந்து புதிய வரலாறு படைத்து தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுதான் மோசமான ஸ்கோராகும். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பரிதாப நிலை ஏற்பட்டது. கேப்டன் வீராட் கோலி இந்த டெஸ்டுக்கு பிறகு நாடு திரும்பிவிட்டார். இதனால் எஞ்சிய 3 டெஸ்டிலும் தோற்று இந்தியா ஒயிட்வாஷ் ஆகிவிடும் என்று விமர்சிக்கப்பட்டது.
அதற்கு ஏற்ற வகையில் முன்னணி வேகப்பந்து வீரரான முகமது ஷமி காயத்தால் விலகினார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் ரகானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி கொடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரகானேவின் சதமும், பும்ரா, அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சும் முக்கிய பங்கு வகித்தது. ஜடேஜா ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்தார். இந்த டெஸ்டில் உமேஷ் யாதவ் காயம் காரணமாக 2-வது இன்னிங்சில் 3.3 ஓவர் மட்டுமே வீசினார்.
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது. இந்த டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பி டிரா செய்வதற்கு விகாரி-அஸ்வின் ஜோடியின் தடுப்பு ஆட்டமே காரணம். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 42.4 ஓவர்களை சந்தித்து அணியை காப்பாற்றினர். விகாரி 161 பந்துகளில் 23 ரன்னும், அஸ்வின் 128 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர்.
இந்த டெஸ்டில் காயத்துடன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 97 ரன் எடுத்தார். அவர் களத்தில் இருக்கும் வரை வெற்றி வாய்ப்பு இருந்தது. அவர் ஆட்டம் இழந்த பிறகு டிரா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிரிஸ்பேனில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை படைத்தது. இங்கு முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை கைப்பற்றியது.
ரிஷப்பண்ட், சுப்மன்கில் ஆகியோரின் அபாரமான ஆட்டமும், புஜாராவின் தடுப்பு ஆட்டமும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூரின் பந்து வீச்சும் வெற்றிக்கு பங்கு வகித்தது. மேலும் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடி சரிவில் இருந்து மீட்டதும் முக்கிய பங்கு வகித்தது.
வீராட் கோலி, விகாரி, ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் பிரிஸ்பேன் மைதானத்தில் சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மைல்கல் ஆகும்.
வீரர்களின் காயம் இந்த தொடரில் கடும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு டெஸ்டுக்கும் வீரர்களை மாற்ற வேண்டிய நெருக்கடி இருந்தது.
ஆனால், இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சாளர்களையும் வைத்து ஆஸ்திரேலிய மண்ணில் ரகானே புதிய வரலாறு படைத்து சாதித்து காட்டினார்.