எடியூரப்பா தலைமையில் கர்நாடகா அரசின் மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 பேர் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: 7 பேர் புதிதாக பதவி ஏற்பு
பதிவு: ஜனவரி 13, 2021 17:14
கர்நாடக மாநில மந்திரி சபை விரிவாக்கம்
கர்நாடக மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்தார். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று எடியூரப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி இன்று எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி. நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி, ஆர். சங்கர், சி.பி. யோகேஷ்வரா, எஸ். அங்காரா ஆகியோரின் இன்று புதிதாக பதவி ஏற்று, எடியூரப்பா தலைமையிலான மந்திரி சபையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி பதவி ஏற்றார். அப்போது அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி 17 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் மந்திரியும் அடங்குவார்.
பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதும், இவர்கள் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 4-வது முறையாக தற்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Tags :