பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மூலம் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி முத்தையா புரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பாக பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டி இன்று காலை நடைபெற்றது.
இந்த போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில் 9 பெரிய மாட்டு வண்டிகளும், 17 சிறிய மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. இரண்டு போட்டியிலும் முதல் பரிசுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டு வண்டிகள் பெற்றன. பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மூலம் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இதில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில் கனிமொழி அரசியல் செய்ய வேண்டாம். ஆனால் அவர்கள் கோவையில் கிராம சபை என்ற பெயரில் கட்சி கூட்டம் நடத்தி அதில் கேள்வி கேட்ட பெண்ணை தி.மு.க.வினர் தாக்கினர். இது தான் தி.மு.க. பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா? இந்த இரட்டை வேடம் குறித்து கனிமொழி பேசட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.