சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை? போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
பதிவு: ஜனவரி 08, 2021 06:54
சென்னை ஐகோர்ட்
சென்னை:
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்
செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேறு ஒரு வழக்கிற்காக மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல்
நடராஜன் காணொலி காட்சி வாயிலாக கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
அவரிடம் நீதிபதி, சென்னை மாநகரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்குகள் பல இன்னும் விசாரணை முடியாமல் பல நீதிமன்றங்களில் நிலுவையில்
உள்ளன. இப்படி கால தாமதமானால் சாட்சிகள் பலர் பிறழ் சாட்சியாக மாற வாய்ப்புள்ளது. 15 ஆண்டுகளாக கொலை வழக்கு நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல
யார் வருவார்? குற்றம் செய்தவர்களுக்கு எப்படி தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்?’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பின்னர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் கூட பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த பலரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.
ஜாமீனில் வெளியே சென்று தலைமறைவானவர்களையும் பிடிக்கவில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, "சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் எத்தனை கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன?
என்பதை வருகிற 25-ந்தேதிக்குள் அறிக்கையாக போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்
உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படும்" என்று உத்தரவிட்டார்.