பொங்கல் பண்டிகைக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக கோவை மற்றும் திருப்பூருக்கு வருகை தரும் ராகுல் காந்தி, தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் இப்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பதுடன் தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் காங்கிரசார் தங்கள் கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் ராகுல்காந்தி எம்.பி.யை அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் ஒருகட்டமாக கோவை மற்றும் திருப்பூரில் தொழில்துறையினருடன் ராகுல்காந்தி பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பின் 20 அல்லது 22-ந் தேதி இந்த கலந்துரையாடல் கூட்டம் நடக்கலாம் என தெரிகிறது. கோவை, திருப்பூர் வருகையின்போது ரோடு ஷோ நடத்தி ராகுல்காந்தி பொதுமக்களை சந்திக்கவும், பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளையும் ராகுல்காந்தி சந்தித்து பேச உள்ளார். தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை எவ்வாறு வெற்றி பெறச்செய்வது, யார்- யாரை எந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.
ராகுல்காந்தி தமிழகம் வருகையால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கோவை, திருப்பூரில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். ராகுல்காந்தியை எவ்வாறு வரவேற்பது, ரோடு ஷோ நடத்தி எப்படி மக்களை சந்திக்க வைப்பது என்பது பற்றி அவர்கள் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் கூறுகையில் பொங்கல் பண்டிகைக்கு பின் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக கோவை மற்றும் திருப்பூருக்கு வருகை தரும் ராகுல்காந்தி, தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார் என்றார்.