நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது- வைகோ வலியுறுத்தல்
பதிவு: ஜனவரி 04, 2021 06:31
வைகோ
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை வனப்பகுதியை, கேரள அரசு கடந்த 2003-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவித்தது. தற்போது
இந்தப் பூங்காவை மேலும் பாதுகாக்கும் நோக்கத்தில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய
சுற்றுச்சூழல் துறை பூங்காவின் கிழக்கு எல்லையைத் தவிர்த்து 1 கி.மீ. தொலைவிற்கான மற்ற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக
அறிவித்துள்ளது.
இது தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான
முயற்சியாக அமைந்துள்ளது. இது வன்மையானக் கண்டனத்துக்கு உரியது.
மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம், நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்வதற்கு கட்டுமான அனுமதி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி
ஆகியவற்றை பெற்றால் மட்டுமே போதுமானது என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்க முடியாதது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் கருதியும், தமிழ்நாடு
போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணையின் மீதான உரிமை கருதியும் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :