பா.ஜனதாவுக்குப் பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலகவில்லை. அவர் யாருக்கும் பயப்படும் நபர் இல்லை என்று குஷ்பு கூறினார்.
நடிகைகள் குஷ்பு, சுகாசினி உள்ளிட்டோருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த சாய் தயாரித்துள்ள மாயத்திரை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் குஷ்புவும் சுகாசினியும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் குஷ்பு பேசியதாவது, பா.ஜனதா சொல்லித்தான் ரஜினி அரசியலுக்கு வர அறிவித்ததாகவும், பா.ஜனதாவுக்குப் பயந்து தான் அரசியலைவிட்டு விலகினார் எனவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
பா.ஜனதாவுக்குப் பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலகவில்லை. அவர் யாருக்கும் பயப்படும் நபர் இல்லை. எது சரி, எது தவறு என்பதை அவரே முடிவு செய்வார். அரசியலுக்கு வருகிறேன் என்று அவரேதான் சொன்னார்.
உடல்நலம் சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அவரே சொல்லிவிட்டார். இதில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
பா.ஜனதாவைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தனியாகவோ அல்லது பா.ஜனதாவுடன் இணைந்தோ வேலை செய்யலாம்.
நாங்கள் யாரையும் தேடி செல்லமாட்டோம். பா.ஜனதாவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, சென்னை வந்திருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருப்பதாக தெளிவாக சொல்லிவிட்டார்.
இதனால் கூட்டணி குறித்த சந்தேகத்திற்கு இடமில்லை. தேர்தலில் கூட்டணி என வரும்போது, கூட்டணிக் கட்சி தலைவர்கள் முடிவு செய்துவிட்டு யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.