காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் கட்சியை 4 மண்டலங்களாக பிரிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து,ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதனால் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை.
இதன் காரணமாக 18 மாதமாக சரியான தலைமை இல்லாமல் காங்கிரஸ் கட்சி தத்தளித்து வருகிறது. பல மாநிலங்களின் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல்களில் கடுமையான சரிவை காங்கிரஸ் சந்தித்துள்ளது.
எனவே இதற்கு அதிருப்தி தெரிவித்து 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்கள். முன்னணி தலைவர்களான குலாம்நபி ஆசாத், மனீஷ் திவாரி, சசிதரூர், ஆனந்த் சர்மா, கபில்சிபல், முன்னாள் முதல்-மந்திரிகள் பூபிந்தர் சிங், பிரிதிவிராஜ் சவான் உள்ளிட்டோரும் இதில் கையெழுத்திட்டு இருந்தனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. இதையடுத்து சமீபத்தில் சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த தலைவர்கள் மற்றும் அதிருப்தி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வர வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தினார்கள். அதை ராகுல் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. எனவே அடுத்த மாதம் அல்லது பிப்ரவரி மாதத்தில் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்தநிலையில் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயங்குவதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாகத்தான் தற்போது அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அவர் நீண்ட நாள் கழித்தே இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ராகுல் காந்தி இவ்வாறு பிடிவாதமாக இருப்பதால் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் என்று அதிருப்தி தலைவர்கள் சிலர் கட்சி மேலிடத்தில் வற்புறுத்தி இருக்கிறார்கள்.
அதாவது சோனியா தொடர்ந்து தலைவராக இருப்பது, ஆனால் கட்சி பணிகளை கவனிப்பதற்காக காங்கிரசை 4 மண்டலங்களாக பிரிக்க வேண்டும். 4 துணைத்தலைவர்களை நியமனம் செய்து ஒவ்வொரு மண்டலத்தின் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கிய முடிவுகளை இதன் 4 தலைவர்களும் இணைந்து எடுக்க வேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையே எப்படியாவது தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியை ஒரு பிரிவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.