பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுப்பினால் பாகிஸ்தானில் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
லடாக் எல்லையில் சீனா குவித்துள்ள படைகளை குறைத்து கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது. இது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் ராணுவ ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நடந்துவிட்டன.
ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அவர்கள் எல்லையில் இருந்து படைகளை பின் வாங்க சம்மதிக்காமல் அதேநிலையில் நீடித்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு சீனா பிடிவாதமாக இருந்தால் பேச்சுவார்த்தையில் எந்த பயனும் இருக்காது. சீன படைகள் வாபஸ் வாங்கும் வரையில் இந்திய படைகளும் அதே இடத்தில்தான் இருக்கும். நாமும் படைகளை ஒருபோதும் குறைக்க முடியாது.
அடுத்த சுற்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை எந்த நேரத்திலும் நடைபெறலாம். அதில் இந்தியாவின் நிலைகளை உறுதியாக எடுத்து சொல்வோம். ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனா செயல்படவேண்டும்.
பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில மாதங்களில் மட்டும் 300 முதல் 400 தாக்குதல்களை இந்தியா மீது நடத்தி உள்ளனர்.
அதற்கு நமது ராணுவம் சரியான பதிலடியை கொடுத்துள்ளது. ஆனாலும் பயங்கரவாதிகளை தொடர்ந்து ஊடுருவ செய்து வருகிறார்கள். காஷ்மீரில் நமது படைகள் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
காஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை ஊடுருவ செய்தால், மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்கள், முகாம்கள் அழிக்கப்படும். இதற்கான சக்தி இந்தியாவிடம் இருக்கிறது. எல்லையில் யார் தொல்லை கொடுத்தாலும் விடமாட்டோம்.
கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்வதால், அதை தடுப்பதற்காகவே கட்டாய மதமாற்ற தடை சட்டங்களை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொண்டு வந்துள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை.
தனிப்பட்ட முறையில் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதை நான் எதிர்க்கிறேன். எதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்? என்னை பொறுத்தவரை சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.