மெரினாவில் கடைகள் வைக்க ஆர்வம் காட்டும் வியாபாரிகள், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்கி சென்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மெரினா கடற்கரை மார்ச் மாதம் மூடப்பட்டது. பொதுமக்கள் மெரினாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் அங்கு நிரந்தர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் சுற்றுலா இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு கடந்த வாரம் முதல் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் மெரினாவிற்கு வந்து செல்கிறார்கள்.
பொதுமக்கள் வந்தாலும் மெரினாவில் கடைகள் வைக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கு வியாபாரம் செய்வதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட வேண்டும். கடைகள் வைப்பதற்கு மாநகராட்சியுடன் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே கடை வைத்து இருந்தவர்களிடமும், புதிதாக கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. கடந்த வாரம் முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் விண்ணப்பம் வாங்க வியாபாரிகள் குவிந்தனர்.
தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக கூட்டம் மேலும் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.
கடந்த 14-ந் தேதி விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. இதுவரையில் 5400 படிவங்கள் வினியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மெரினாவில் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி கடைகள் வைக்க அனுமதிக்கப்படும். சாப்பிடக்கூடிய உணவுகள், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் போன்ற கடைகளுக்கு அனுமதிக்கப்படும். எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், டாட்டூஸ் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை.
மெரினாவில் கடைகள் வைக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். வண்டிகள் மூலம் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 300 வண்டிகள் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும்.
மேலும் 900 வண்டிகள் மார்ச் மாதத்திற்குள் வியாபாரிகளுக்கு கொடுக்கப்படும்.
மீனவ குடியிருப்பில் வசிக்கும் மக்களும் அங்கு கடந்த பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடைகள் முறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.