டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகிறது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம். சிறைக்கு போகும் ஆர்வத்துடன் போராட்டத்தை நடத்தினேன்.
1957ல் கருணாநிதியின் முதல் சட்டமன்ற பேச்சே விவசாயிகள் பற்றித்தான்; நான் அவருடைய மகன். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறும் வரை, எங்களுடைய போராட்டமும் ஓயாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
புதிய வேளாண் சட்டங்கள் நாட்டில் விவசாயிகள் இருக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது என தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பேசினார்.