எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுக்கு மட்டுமே சொந்தம் என்றும் கமல் ஹாசனுக்கு அரசியல் தெரியவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஒன்றாக இணைந்தால் ரசிகர்கள் படம் பார்க்க மட்டும் தான் கூடுவார்கள். அதனால் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாகலாம். மக்கள் விரும்பினால் மட்டும் தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.
கமலஹாசனை பொறுத்த வரையில் அவருக்கு அரசியல் தெரியவில்லை. அது தெரியாமல் ஏதேதோ பேசி வருகின்றார்.
அ.தி.மு.க. ஆரம்பித்து 49 வருடங்கள் ஆகும் நிலையில் அடுத்த ஆண்டு 50-வது ஆண்டு தொடங்கி பொன் விழா ஆண்டாக அடியெடுத்து வைக்க உள்ளோம். இதற்கிடையில் 10 முறை தேர்தலை சந்தித்து 7 முறை வெற்றி பெற்றுள்ளோம்.
அ.தி.மு.க. வரலாற்றில் 49 ஆண்டுகாலத்தில் 37 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி அமைத்தது அ.தி.மு.க. தான். எனவே தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள், புதிய கூட்டணிகள் எவ்வளவு வந்தும் அ.தி.மு.க. தான் வெற்றி பெற்றுள்ளது.
புதியதாக 3-வது அணி அல்லது 4, 5-வது அணிகள் அமைந்தாலும் அதைப்பற்றி அ.தி.மு.க.விற்கு கவலை இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கூட்டணி இல்லாமல் தனியே நின்று வெற்றி பெற்ற ஒரே கழகம் அ.தி.மு.க. தான்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பேரவை தேர்தலில் 3-வது அணி அல்ல, எத்தனை அணி அமைத்தாலும் அதி.மு.க. தான் வெற்றி பெறும். எம்.ஜி.ஆர். அனைத்து மக்களுக்கும் பொது வானவராக இருந்தாலும் அரசியல் ரீதியாக பார்த்தால் அ.தி.மு.க.வுக்கு மட்டுமே அவர் சொந்தம்.
அ.தி.மு.க. அவர் உருவாக்கிய இயக்கம். அந்த புகழும், பெருமையும் அ.தி.மு.க.வுக்கு தான் வலு சேர்க்கும். மற்றவர்களுக்கு வலு சேர்க்காது.
தேர்தல் நேரத்தில் போராட்டம் நடத்தி மக்களை திசைதிருப்புவதற்கு தி.மு.க. முயல்கிறது. பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு சரியான குரல் கொடுக்கிற இயக்கமாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இதற்கு அரசு மூலம் என்ன தீர்வு என்பது குறித்து முதல்வர் பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.