தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர்களுக்கு மக்கள் ஆதரவு தட மாட்டார்கள். அதில் விதிவிலக்காக இருந்தது எம்.ஜி.ஆர். மட்டுமே என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் அ.தி.மு.க இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க சுமார் 50 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு 2-வது முறையாக தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்ற காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே கூறியிருந்தார்.
வருகிற பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் தமிழக சட்ட மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஆகவே பெண்களின் ஆதரவு இருந்தால் போதும் அ.தி.மு.க ஆட்சி மீண்டும் சாத்தியமாகி விடும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 72 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற அ.தி.மு.க அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்துக்கூற வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு மக்கள் ஆதரவு தட மாட்டார்கள். அதில் விதிவிலக்காக இருந்தது எம்.ஜி.ஆர். மட்டுமே. ஆகவே மக்களை பற்றி சிந்திக்காத தற்போதுள்ள நடிகர்களுக்கு கூட்டம் கூடலாம். அவை வாக்குகளாக மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.