கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம்: அஸ்வத் நாராயண்
பதிவு: டிசம்பர் 05, 2020 07:24
அஸ்வத் நாராயண்
பெங்களூரு :
கர்நாடக மேல்-சபையில் ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதி உறுப்பினர்களுடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது உள்ள பாலிடெக்னிக் படிப்புகளால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை. பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 40 ஆயிரம் மாணவர்கள் வெளியே வருகிறார்கள். ஆனால் அதில் 20 சதவீதம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை. தற்போது உள்ள பாலிடெக்னிக் படிப்புகள் சரியானதாக இல்லை என்பது தான் அதற்கு காரணம். அதனால் தொழில் துறைக்கு தேவையான படிப்புகளை அறிமுகம் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறோம். அதனால் பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டத்தை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்காக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவது இல்லை. தேசிய கல்வி கொள்கைக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள கல்வி கொள்கையால் எந்த பயனும் கிடையாது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து மந்திரிசபையில் முடிவு எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் புதிதாக கற்றல் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. அரசு உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வரும் 5 லட்சம் பேர் தொழில்நுட்ப உதவியால் கற்றலை மேற்கொள்கிறார்கள். கர்நாடகத்தில் தற்போது 8 ஆயிரம் வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் துரித வேகத்தில் இணைய வசதி கிடைக்கும். “பவர் பாயிண்ட்“ மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி நடைபெறும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :