கேஎல் ராகுல் அரைசதம் அடித்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
முதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு
பதிவு: டிசம்பர் 04, 2020 15:33
ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு டி20 அறிமுக தொப்பியை ஜஸ்பிரித் பும்ரா வழங்கினார்.
இந்திய அணியின் கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, கேப்டன் கோலி 9 ரன்கள் மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் பந்துகளை அடித்து ஆடிய கே.எல். ராகுல் 37 பந்தில் அரைசதம் அடித்தார்.
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேஎல் ராகுல் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுது்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 16 ரன்னிலும் வெளியேறினார்.
இதனால் இந்தியாவின் ஸ்கோர் அப்படியே குறைய ஆரம்பித்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.1 ஓவரில் 86 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 16.5 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது.
கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 47 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்துள்ளது.
Related Tags :