காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. உடன் கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டது. என்றாலும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுத்ததால் தான் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியவில்லை என்று விமர்சனம் எழுந்தது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியில் காங்கிரஸ் தோற்றது. 9 இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.
சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அங்கு ராஷ்டீரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க. கூட்டணியுடன் சேர்ந்து காங்கிரஸ் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே கடந்த தேர்தலைப் போல அதிக தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ள தொகுதிகளை மட்டுமே தொகுதி பங்கீட்டின்போது தி.மு.க.விடம் கேட்டுப் பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இதற்காக தமிழக காங்கிரஸ் ஏற்கனவே தொகுதிகளை ஆய்வு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு தேர்தலை சந்திப்பது? பிரசார வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஏற்கனவே தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை 4.30 மணியளவில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
ராகுல்காந்தி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் சஞ்சீவ்தத், ஸ்ரீவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக் கரசர், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எவ்வாறு எதிர்கொள்வது? தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்பது? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து ஏற்கனவே நடந்த ஆலோசனை விபரங்கள் ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் கருத்துக்களும் கேட்கப்படுகிறது. பிரசார வியூகம் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெவிக்கிறார்கள்.
அனைத்து கருத்துக்களும் ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பிரசாரம் செய்வது பற்றிய தயாரிப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.