அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய பாதிப்பு இல்லை - முதல்வர் பழனிசாமி
பதிவு: நவம்பர் 26, 2020 19:29
முதல்வர் பழனிசாமி.
கடலூர்:
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை- காற்றினால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கடலூர் மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடலூரில் பாதிக்கபட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைபள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறியும்போது முதலமைச்சரை முதியவர் ஒருவர் திடீரென தொட்டு வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து புயல் பாதுகாப்பு மையத்தில் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்.
மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. புயல் வெள்ளத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்க மழை நீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின்சார வினியோகம் தொடங்கும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகள், இழப்புக்கு உரிய நிவாரணம் பெற முடியும்.
கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
Related Tags :