வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவ.6 ந்தேதி தொடங்கி டிச.6 ந்தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதனால் பாஜக தரப்பு கோர்ட்டுக்கு சென்றது. அங்கும் கொரோனா காலம் என்பதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக டி.ஜி.பி. தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து டி.ஜி.பி. தரப்பில் வாதிடுகையில், “பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முறையாக முகக்கவசம் அணியவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவினர் பொறுப்பை உணராமல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே. நவ.6ந் தேதி பாஜகவினர் தடையை மீறி ஊர்வலம் சென்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது.