ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பதிவு: நவம்பர் 08, 2020 12:30
பேரறிவாளன் (கோப்பு படம்)
விழுப்புரம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் கடந்த மாதம் பரோலில் வெளியே வந்தார். அவரது பரோல் நாளையுடன் (9-ந் தேதி) முடிவடையும் நிலையில் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட பேரறிவாளன் விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முடிவு செய்தார். அதன்பேரில் மருத்துவ சிகிச்சைக்காக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் அவரது தாயார் அற்புதம்மாளும் வந்திருந்தார். ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு சிறுநீரக பரிசோதனை செய்து கொண்டார்.
இதையடுத்து திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அவர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல், இதயம், பிரச்சினை தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து போலீஸ் வாகனத்தில் பேரறிவாளன் ஜோலார்பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதையொட்டி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனியார் ஆஸ்பத்திரியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.