அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்- அமைச்சர் தகவல்
பதிவு: நவம்பர் 08, 2020 11:39
அமைச்சர் செங்கோட்டையன்
மதுரை:
மதுரையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியார் பள்ளிகளில் படித்த 5.18 லட்சம் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளிகள் திறப்பது குறித்து
பெற்றோர்களிடம் கருத்து கேட்பு முடிந்த பிறகுதான் முடிவு அறிவிக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசால்
அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு இறுதி தேர்வுக்கான 40 சதவீத பாடங்களை குறைக்கலாம் என பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்
அடிப்படையில் குறைக்கப்பட்ட பாடங்கள், தேர்வுக் குரிய பாடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தங்குதடையில்லாமல் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக 303
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தைவிட சிறந்த பாட திட்டத்தை தமிழக அரசு உருவாகி
உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நீட் தேர்வு பயிற்சிக்கு
இதுவரை 15 ஆயிரத்து 482 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் கூறினால் அதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்து முதல்-அமைச்சர்
ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.