சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி கவர்னர் மாளிகை முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
கவர்னர் மாளிகை முன்பு நாளை ஆர்ப்பாட்டம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
பதிவு: அக்டோபர் 19, 2020 08:03
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தகுதி திறமை என்ற பெயரில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் செயலில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாகவே நீட் தேர்வு
திட்டமிட்ட சதியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் தேர்வைக் கூட முறையாகவும் துல்லியமாகவும் நடத்துவதற்கு திராணியற்றதாக உள்ளது
மத்திய அரசு. இது ஒருபுறம் இருக்க கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தமிழக அமைச்சரவை, நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக கிராமப்புற
மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒரு சட்டத்தை இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. ஆனால்
கவர்னர் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக
துணை வேந்தர் சூரப்பா, கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் மாநில உரிமைகளுக்கு எதிராகவும், மாநில அரசை கலந்தாலோசிக்காமலும்
தன்னிச்சையாக மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். துணைவேந்தரின் இந்த அத்துமீறிய செயல் மாணவர் நலன்களை கடுமையாக
பாதிக்கும்.
எனவே சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் சூரப்பாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவேண்டும். இந்த 2 கோரிக்கைகளையும்
உடனடியாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி 20-ந்தேதி (நாளை) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கவர்னர் மாளிகை
முன்பும், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.