கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கடந்த 2 நாட்களாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
விஜயகாந்த் ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது உடல் நிலையை காலை, மாலை இரு நேரமும் டாக்டர்கள் கண்காணித்து மருந்து வழங்கி வருகிறார்கள்.
விஜயகாந்துக்கு 6 சதவீத அளவுக்குதான் கொரோனா பாதிப்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 40 சதவீதத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால்தான் பயப்பட வேண்டும். 6 சதவீதம் என்பது மிக குறைவான தொற்று என்பதால் எளிதில் குணப்படுத்த முடிந்ததாக டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மியாட் ஆஸ்பத்திரியில் தனி அறை கொண்ட சாதாரண வார்டில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் இன்னும் 5 நாளில் வீடு திரும்பி விடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் தினமும் வழங்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை முன்னேற்றம் பற்றி காலை-மாலை இரு வேளையும் டாக்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.