மணப்பாறை முதல் கைலாசாவுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மணப்பாறை:
போலீசாரால் தேடப்படும் சுவாமி நித்யானந்தா ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தனித்தீவினை விலைக்கு வாங்கி கைலாசா என்ற தனிநாட்டை பிரகடனம் செய்தார். அந்த நாட்டிற்கு தன்னை பிரதமராக அறிவித்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஆட்சி மொழி, கொடி போன்ற வற்றையும் அறிவித்தார்.
இதையடுத்து கைலாசா நாட்டில் குடியேற விரும்பியவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பித்தனர். மதுரையை சேர்ந்த ஒருவர் ஓட்டல் அமைக்க விருப்பம் தெரிவித்ததையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நித்யானந்தாவின் இந்த நடவடிக்கைகளை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். ஏற்கனவே திருச்சி துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் திருமண நிகழ்ச்சியில் கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின் படத்தை வைத்து விளம்பர பதாகை வைத்தனர். இந்த விளம்பர பதாகை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தநிலையில் தற்போது முகநூல் பக்கத்தில் மணப்பாறை முதல் கைலாசாவுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது. அதில் மணப்பாறை முதல் கைலாசா என்றும், வழி வையம்பட்டி என்றும் அரசு போக்குவரத்து கழகம்-கைலாசா என்ற வாசங்கள் அடங்கிய பஸ்சில் ஒரு பக்கம் நித்யானந்தா அமர்ந்திருப்பது போலவும், இன்னொரு பக்கம் வடிவேலு நடனம் ஆடுவது போலவும் 2 பாடல்களுடன் வீடியோவாக எடிட் செய்து அதை பதிவேற்றம் செய்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.