தனியார் பேருந்துகளை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என்பதால், பேருந்து உரிமையாளர்களுடன் நாளை காலை ஆலோசனை நடத்தி பேருந்து இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பொது முடக்கத்துக்கு முன்னதாக 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
அண்மையில், மாவட்டத்துக்குள் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்தது. ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதித்தால் மட்டுமே தங்களால் பேருந்துகளை இயக்க முடியும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியிருந்தனர்.
75 சதவீத தனியார் பேருந்துகள் மாவட்டத்துக்கு வெளியே இயக்கப்பட்டு வந்ததால், அவற்றை மாவட்டத்துக்குள் இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பேருந்துகளை இயக்க அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2-ந்தேதி (புதன்கிழமை) உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தருமராஜ் கூறியதாவது:-
பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து பேருந்து உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளோம்.
வரிவிலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தும் எந்தப் பலனும் இல்லை. எனினும் எங்களது கோரிக்கையை ஏற்று, வெளி மாவட்டத்துக்கு பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இவ்வாறு பேருந்துகளை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என்பதால், பேருந்து உரிமையாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலோசனை நடத்தி பேருந்து இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.