மக்களுக்கு தேவையான நிதி உதவி அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது - ராகுல் காந்தி பாராட்டு
பதிவு: மார்ச் 26, 2020 18:06
ராகுல் காந்தி
புதுடெல்லி:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியமின்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, மக்களுக்கு தேவையான நிதி உதவி அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நிதி உதவி தொகுப்பு பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு, சரியான திசையின் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Related Tags :