தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பொதுமக்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறும் வாகன ஓட்டிகள்... பெட்ரோல் விற்பனையில் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை
பதிவு: மார்ச் 26, 2020 13:29
பெட்ரோல் பங்க்
சென்னை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், பெட்ரோல், டீசல் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். பொது சேவை வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் ஊடகத்தினரின் வாகனங்கள் சாலைகளில் தடையின்றி செல்லலாம்.
பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல், வாகனங்களில் வெளியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை பார்க்க முடிகிறது. இதுதொடர்பாக ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி, தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
‘கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் கட்டுப்பாடின்றி வருகின்றனர். எனவே, அதனை கட்டுப்படுத்தும் வகையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அதேசமயம், அரசு வரையறுத்துள்ள சேவைகள், பால், காய்கறி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு 24 மணி நேரமும் பெட்ரோல், டீசல் வழங்க தயாராக இருக்கிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.