இந்தியாவில் ஊரடங்கு உத்தரவினால் ஏற்படும் பொருளாதார தாக்கத்திற்கு மத்தியில், பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன.
பொருளாதார தாக்கத்திற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
பதிவு: மார்ச் 26, 2020 12:39
சென்செக்ஸ் உயர்வு
மும்பை:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழில்துறை முடங்கி உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. பொருளாதார இழப்பை சரிசெய்யும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நிதிச் சலுகைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பு பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. இதன் காரணமாக சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின்போது ஏற்றம் பெற்றன. 21 நாட்கள் முழு அடைப்பினால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்தனர்.
காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 713.76 புள்ளிகள் உயர்ந்து, 29249.54 புள்ளிகள் வரை சென்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 167.95 புள்ளிகள் உயர்ந்து, 8485.80 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடர்ந்தது. மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 29,881 புள்ளிகளுடனும், நிப்டி 8677 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது.
அதிகபட்சமாக இந்தஸ்இந்த் வங்கியின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்தன. ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் பெற்றன.
ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ மற்றும் சியோல் சந்தைகளில் கலவையான வர்த்தகம் காணப்பட்டது. வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையின் பங்குகள் ஒரே இரவில் உயர்வுடன் நிறைவடைந்தது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.51 சதவீதம் சரிந்து, 27.25 டாலர்களாக உள்ளது.
Related Tags :